சம்பள உயர்வு கோரி 14 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0
468

பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது

இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்த 21-ந்தேதி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

வங்கி ஊழியர்கள் ஏற்கனவே வேறு சில பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், வங்கி ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகியவை வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.

இதில் சுமார் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 14 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் முடங்கின. கடந்த 21-ந்தேதி நடந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஆனால் இன்று நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கிகளின் பணிகள் 100 சதவீதம் நடைபெறவில்லை.

தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகள் அனைத்தும் இன்று முடங்கின. எந்தவித பணியும் நடைபெறவில்லை.

தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படாததால் சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை பணபரிவர்த்தனை பாதிப்புக்குள்ளானது. பல ஊர்களில் ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் தினமும் வங்கிகள் மூலம் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி காசோலை பணபரிவர்த்தனை நடைபெறும். காசோலை பணப்பரிவர்த்தனை இன்று நாடு முழுவதும் நடக்கவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான காசோலை பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை.

இது தனியார் தொழில் நிறுவனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர்களும் இன்று வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும், பணம் செலுத்த முடியாமலும் அவதிக்குள்ளானார்கள்.

வங்கி ஊழியர்கள் எந்த வித கணக்குகளையும் பார்க்க மறுத்து விட்டதால் ஏற்றுமதி – இறக்குமதி நடவடிக்கைகளிலும் பாதிப்பு காணப்பட்டது. அரசாங்க கருவூல கணக்குகளிலும் வங்கி ஸ்டிரைக்கின் தாக்கத்தை உணர முடிந்தது.

வங்கி அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி ஸ்டிரைக் செய்ததைத் தொடர்ந்து 22, 23-ந்தேதிகளிலும் வங்கிப் பணிகள் முடங்கின. நேற்று முன்தினம் மட்டும் மீண்டும் வங்கி சேவைகள் நடந்தன.

நேற்று (24.12.2018) கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காரணமாக வங்கிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று (26.12.18) வங்கி பணிகள் முடங்கி உள்ளன.

கடந்த 20-ந்தேதிக்கு பிறகு 6-வது நாளாக வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியான வங்கி சேவை முடக்கம் காரணமாக மக்கள் மத்தியில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here