சனி தோஷம் நீக்கும் கூர்மமூர்த்தி

0
763

ஆபத்து வருங்காலத்தில் ஆமை, தன் உடலை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு தற்காத்துக் கொள்வதைப் போல, மனிதனும் தன் ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை அடக்கப் பழக வேண்டும் என்பதை, ‘ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து..’ என்கிறார் வள்ளுவர்.

இந்த அரிய தத்துவத்தை ஆமை (கூர்ம) அவதாரம் எடுத்ததன் மூலம், உலகுக்கு விளக்கினார் விஷ்ணு. ஆமையின் வடமொழிச் சொல்லே ‘கூர்மம்.’ ஆந்திராவில் ஸ்ரீகாக்குளம் மாவட்டம், ஸ்ரீகூர்மம் என்ற ஊரில், கூர்ம அவதாரத்துக்கான கோவில் இருக்கிறது. கருவறையில், ஆமை வடிவில் அருள்பாலிக்கிறார் பெருமாள். தசாவதாரத்தில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். மகாவிஷ்ணுவின் பிற அவதாரங்கள் யாவும் தீயவர்களை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல், பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குவதற்காக எடுக்கப்பட்ட அவதாரமாகும்.

தேவலோகத்துப் பெண் ஒருத்தி, அலைமகள் கொடுத்த மலர் மாலையைத் தனது வீணையில் சுற்றிக் கொண்டு பிரம்ம லோகம் வழியாக சென்றாள். அப்போது வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள். அவரை வணங்கியவள், தன்னிடமுள்ள மாலையை அவரிடம் கொடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட முனிவர், அந்த மாலையுடன் தேவலோகம் நோக்கிச் சென்றார்.

எதிரே தேவேந்திரன் யானை மீது அமர்ந்து வந்து கொண்டிருந்தான். அவனிடம் அந்த மலர் மாலையைக் கொடுத்தார் முனிவர். தேவேந்திரனோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி, யானையின் தலையில் வைத்தான். யானையோ தன் துதிக்கையால் அந்த மாலையை எடுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தது. துர்வாசருக்கு கடும் ஆத்திரம். லட்சுமி தேவியின் பிரசாதத்தை அவமதித்ததால், மூன்று உலகங்களிலும் லட்சுமி கடாட்சம் அழியட்டும் என சாபமிட்டார்.

இந்திரன் பதறிப் போய் முனிவரின் காலில் விழுந்தான்; ஆனால், துர்வாசர் கண்டுகொள்ளவில்லை. லட்சுமி கடாட்சம் இல்லாததால், உலகமே வறுமையில் ஆழ்ந்தது. இதனை அறிந்த அசுரர்கள் தேவேந்திரனின் கோட்டைக்குள் புகுந்து போர் புரியலானார்கள். போரில் அசுரர்கள் வீழ்ந்தாலும், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் சஞ்சீவி மந்திரத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். ஆனால் தேவர்களில் இறந்தவர்களை உயிர்ப்பிக்க வழியில்லை. இதனால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனைக் கண்ட தேவேந்திரன், பிரம்மன் தயவை நாடினான். பிரம்மன், மகா விஷ்ணுவிடம் தேவேந்திரனை அழைத்துச் சென்றார்.

விஷ்ணுவோ, ‘தேவர்கள் வலிமை பெற்று, அரக்கர்களை அடக்கி ஆள வேண்டுமானால், பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க வேண்டும். அதைப் பருகுவோர் சாகாநிலை பெறுவர்; ஆனால், அதைப் பெறுவது சாதாரணமானதல்ல. தேவர்கள் ஒரு பகுதியாகவும், அரசுரர்கள் ஒரு பகுதியாகவும் இருந்து கடைந்தால் மட்டுமே அமிர்தம் கிடைக்கும்’ என்றார்.

அசுரர்களுக்கும் அமிர்தம் தருவதாகக் கூறியதால் அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டனர். பாற்கடலைக் கடைவதற்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அவ்வளவு பெரிய கடலை கடைய பெரிய மத்து வேண்டுமே!. மேரு மலையை மத்தாக்கினார்கள். மத்தை இழுக்கும் கயிறாக மாற, வாசுகி என்ற பாம்பு சம்மதித்தது. அரக்கர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டும் வகையில், தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டனர். தேவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டு கடலைக் கடைய ஆரம்பித்தனர்; ஆனால், மலை அசையவில்லை. கடலின் அடிப்பகுதிக்குள் நன்றாகச் சிக்கிக் கொண்டது.

உடனே விஷ்ணு, ஆமையாக உருமாறி கடலுக்குள் சென்றார். மலையைத் தூக்கி, தன் முதுகில் வைத்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் எவ்வித சிரமமும் இன்றி கடலைக் கடைந்தனர். ஒரு கட்டத்தில் வலி தாங்காத வாசுகி, ஆலகால விஷத்தை கக்கியது. அந்த விஷத்தால் உலக உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அந்த விஷத்தை சிவபெருமானே உண்டார். அந்த விஷம் ஈசனின் வயிற்றுக்குள் இறங்காமல் இருக்க, அவரது கழுத்தைப் பிடித்தார் பார்வதிதேவி. இதனால் விஷமானது, ஈசனின் கழுத்திலேயே நீல நிறத்தில் தங்கிப்போனது. இதனால் அவர் ‘நீலகண்டன்’ என்று பெயர் பெற்றார்.

தொடர்ந்து மீண்டும் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது காமதேனு என்ற பசு வெளிப்பட்டது. இது பார்வதியிடம் சேர்ந்தது. அடுத்து பொன்மயமான ஒளியுடன் உச்சைசிரவஸ் என்ற ஏழு தலை குதிரை தோன்றியது. இது பறக்கும் ஆற்றல் படைத்தது. அடுத்ததாக ஐராவதம் என்ற நான்கு தந்தங்கள் கொண்ட வெண்மை நிற யானை தோன்றியது. இது இந்திரனின் வாகனம் ஆனது. பின்னர் பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் ஆகிய மரங்கள் தோன்றின. இவற்றில் கற்பக மரத்தின் கீழ் இந்திரன் அமர்ந்தான். கேட்பதைக் கொடுக்கும் சக்தி கொண்டது கற்பகம். அடுத்து கவுஸ்தூபம் (உத்திரியம்) தோன்றியது. இது அணிபவர்களுக்கு ஆற்றலையும் வெற்றியையும் தரக்கூடியது. இதனை திருமால் அணிந்தார்.

அதற்குப்பின் ஜேஷ்டாதேவி  என்னும் மூத்த தேவி தோன்றினாள். (மூத்த தேவியே மூதேவி ஆனாள்.) இவளை யாரும் ஏற்காததால் பூலோகம் சென்றாள். இவளுக்கு அடுத்து மிக அழகான அறுபது கோடி தேவலோகப் பெண்கள் (அப்சரஸ்) தோன்றினார்கள். இவர்களை தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். அடுத்து தோன்றியவர் வருணி. இவர் மது போன்ற போதை தரும் பானங்களின் அதிபதி ஆவார். இவருடன் அதிதேவதையான சுராதேவியும், மதியை மயக்கும் கணக்கற்ற அழகு மங்கையர்களும் தோன்றினார்கள். அவர்களை அசுரர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்குப் பின் தோன்றியவள் தான் இளையதேவி, ஸ்ரீதேவி எனப்படும் மகாலட்சுமி. மலர் மாலையை ஏந்தியவளாய் அவதரித்த இவள், தனக்குத் தகுந்த மணாளன் மகாவிஷ்ணுவே என்பதனை அறிந்து, மகாவிஷ்ணுவிற்கு மாலை அணிவித்து திருமாலின் நெஞ்சில் அமர்ந்தாள். அடுத்து விஷக்கொடுமையை நீக்கும் மூலிகையுடன் சந்திரன் வெளிப்பட்டான். அவன் கைகளில் நீலோத்பல மலர், மோக சாஸ்திரச் சுவடிகள் இருந்தன. அடுத்துத் தோன்றியது ஸ்யமந்தகமணி. இதனைச் ‘சிந்தாமணி’ என்றும் சொல்வர். அதைச் சூரியன் ஏற்றான்.

கடைசியில் அவதரித்தவர் தன்வந்திரி. நான்கு கைகளுடன் அவதரித்த இவர் கைகளில் சீந்தில்கொடி, அட்டைப்பூச்சி, அமிர்த கலசம், கதாயுதம் தரித்திருந்தார். இவர் மருத்துவர்களின் தேவதை ஆனார். இவரது கையிலிருந்த அமிர்த கலயத்தில் இருந்து துளசி தோன்றியது.
தன்வந்திரியின் கையிலிருந்த அமிர்த கலயத்தைப் பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. அமிர்தத்தை அசுரர்கள் பருகினால் நீண்ட ஆயுள் பெற்று தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து, அதை அவர்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மோகினி அவதாரம் எடுத்தார் திருமால்.

அவரது அழகில் அசுரர்கள் மயங்கினர். அப்போது அமிர்தத்தை தானே பங்கிட்டுத் தருவதாக மோகினி சொன்னாள். யார் மோகினியிடம் இருந்து அமிர்தத்தை பெறுவது என்பதில் அசுரர்களுக்குள் மோதல் வெடித்தது. அதை சாதகமாக பயன்படுத்திய மோகினி, அமிர்தத்தை தேவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தாள். அப்போது ஒரு அசுரன், சூரிய- சந்திரர்களுக்கு இடையில் அமர்ந்து அமிர்தம் பெற்று பருகினான். அதை சூரியன் சுட்டிக்காட்ட, மோகினியானவள் அமிர்தம் வழங்கிய சட்டுவத்தால் அவனது தலையை வெட்டினாள். தலைவேறு, உடல் வேறாக பிரிந்த அந்த அசுரனே இரண்டு உருவாக மாறி ராகு, கேது என்று அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி பல பொருட்களும், பல நிகழ்வுகளும் நடந்தது திருமாலின் கூர்ம அவதாரத்தின் போது தான். இந்த கூர்ம அவதார நிகழ்வுகள் அனைத்தும் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயத்தில் கருங்கல் சிற்பமாகவும், பாங்காங்கின் விமான நிலையத்தில் வண்ணமிகு சுதைச் சிற்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

சுவேதபுரத்து அரசன் சுவேதனின் மனைவி விஷ்ணுபிரியா. அவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று விரதமிருந்து பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது சுவேத மன்னன், மனைவியை காதலுடன் பார்த்தான். விரதத்தில் இருக்கும்போது மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்த விஷ்ணு பிரியா, திருமாலை மனதார நினைத்துக் கொண்டாள். அப்போது தம்பதியர் இருவருக்கும் இடையே ஒரு நதி பிரவாகம் எடுத்து ஓடியது.

அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடந்து என் தேவியை அடைய, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த கூர்ம அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான்.
பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, சுவேத புஷ்கரணியாக மாறியது. மேலும் சுவேதபுரம் என்னும் அத்தலம் அன்று முதல் ‘ஸ்ரீகூர்மம்’ எனப் பெயர் பெற்றது. சுவேத மன்னனால் கட்டப்பட்ட இவ்வாலயம் அதன் பின் வந்தவர்களால் திருப்பணி செய்யப்பட்டது.
சுவேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் ஸ்ரீகூர்ம நாயகி தாயாருடன் ஸ்ரீகூர்மநாதராக அருள்புரிகிறார். இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது.
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. கூர்மாவதாரத்திற்கு என உலகில் உள்ள ஒரே கோவில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி, சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைவிடம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீகாகுளத்தை அடைந்து, அங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திசை மாறிய கூர்மமூர்த்தி

இத்தலம் முன்பு கூர்ம லிங்கேஸ்வரம், பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பட்டு சைவாகம பூஜை விதிமுறைப்படி பூஜைகள் நடைபெற்றுள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க வேண்டி, அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தின் அருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கினர் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here