காமராஜர் நகர் இடைத்தேர்தேலில் கட்டுக்கட்டாக கரன்சிகள், காற்றில் பறக்கும் வாக்குறுதிகளால் அனல் பறக்கும் பிரச்சாரம்

0
499


கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு நடந்த தொகுதி மறு சீரமைப்பில், மிகப் பெரிய தொகுதிகளான லாஸ்பேட்டை மற்றும் ரெட்டியார்பாளையம் தொகுதிகளின் 6 வார்டுகளைப் பிரித்து, காமராஜர் நகர் தொகுதி என்று புதியதாக உருவாக்கப்பட்டது.

முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, உருளையன்பேட்டை ஆகிய தொகுதிகளை எல்லைகளாகக் கொண்ட இந்தப் புதிய தொகுதி, முதல் சட்டப்பேரவைத் தேர்தலை கடந்த 2011-ல் எதிர்கொண்டது.

அதுவரை நெட்டப்பாக்கத்தில் போட்டியிட்ட வைத்திலிங்கம், மறு சீரமைப்பில் நெட்டபாக்கம் தொகுதி தனித் தொகுதியானதால், காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டார்.. இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். பின்பு, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும், வைத்திலிங்கம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பின்பு, கடந்த 2019ம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீண்ட இழுப்பறிக்குபின் வைத்திலிங்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று வைத்திலிங்கம் எம்.பி-யானதால், காமராஜர் நகர் தற்போது இடைததேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமாக இருந்த ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி கூட்டணி சார்பில் ரியல் எஸ்டேட் அதிபரான புவனா (எ) புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.

காங்கிரசும் அதிலிருந்து பிரிந்த என்.ஆர்.காங்கிரசும் நேருக்குநேர் மோதும் இந்தத் தேர்தல், முதல்வர் நாராயணசாமிக்கும் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையிலான போட்டியாகவே பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், இந்தத் தொகுதியைக் கைப்பற்ற முதல்வர் நாராயணசாமிக்கும், காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கும் கடுமையான போட்டி நிலவியது. தனது நண்பரான ஜெயக்குமார் ரெட்டியாரை வேட்பாளராக நிறுத்துவதற்காக நமச்சிவாயம் முயற்சித்த அதே நேரத்தில், தனக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை முன்னிறுத்தினார், முதல்வர் நாராயணசாமி.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதும், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி, முதல்வராகப் பதவியேற்றார். அதன்பிறகு அவருக்காக யாரும் தொகுதியை விட்டுக்கொடுக்காததால் அல்லாடிய அவர், நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நெல்லித்தோப்பு தொகுதியில் நின்று வெற்றிபெற்று, தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார்.

அந்த நன்றிக் கடனுக்காகத்தான், தற்போது ஜான்குமாருக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டாலும் உண்மையில் இது, பழுத்த அரசியல்வாதியான நாராயணசாமியின் சதுரங்க விளையாட்டு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இங்கு, வேறு யாரை நிறுத்தினாலும் தொகுதி கைவிட்டுச் சென்றுவிடும் என்று நினைக்கும் முதல்வர் நாராயணசாமி, தனக்காக நெல்லித்தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தினால், 2021 தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியை மீண்டும் ஜான்குமாருக்கே கொடுத்துவிட்டு, காமராஜர் நகர் தொகுதியைத் தனக்கானதாகத் தக்கவைக்கலாம் என கணக்கு போடுகிறார்.

ஒருவேளை, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, தாம் டெல்லி சென்றுவிட்டால், தனது மகள் விஜயகுமாரியைக் களமிறக்கிவிடலாம் என்பதும் அவர் கணக்கு. டெல்லி வரை சென்ற இந்த தொகுதிப் பஞ்சாயத்தில், வழக்கம்போல முதல்வர் நாராயணசாமியே வெற்றிபெற்றார்.

இதில் கடுப்பான அமைச்சர் நமச்சிவாயம், தனது பெரிய மாமனாரான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு ஆதரவுக் கரம் நீட்டிவிட்டார் என்ற பேச்சு பரவலாக அடிபடுகிறது.
இந்தக் கணக்கைப் புரிந்துகொண்ட மக்கள், ஜான்குமாரை நாராயணசாமியாகவும், தங்கள் தொகுதியை ஸ்டார் தொகுதியாகவும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அசைக்க முடியாத பொருளாதார பலம், முதல்வர் நாராயணசாமியின் ஆதரவுபெற்ற ஆளும் கட்சி வேட்பாளர் போன்றவை ஜான்குமாருக்கு ப்ளஸ். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர் என்பது மைனஸ். அதேபோல நாராயணசாமிக்காகத் தொகுதியை விட்டுக்கொடுத்ததால், மக்களிடம் பரவலாகக் கிடைத்த அறிமுகம் இந்தத் தொகுதியில் கைகொடுக்குமா என்பதும் கேள்விக்குறிதான்
என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனைப் பொறுத்தவரை, பொருளாதார பலம் மிக்கவர் என்பதும் முன்னாள் முதல்வர் ரங்கசாமி பேனரில் போட்டியிடுவதும் ப்ளஸ். அதேசமயம், தொகுதியைச் சேராதவர் என்பது மட்டுமல்ல, மக்களுக்கு அறிமுகமில்லாதவர் என்பதும் இவருக்கு மைனஸ்.

35,325 வாக்காளர்களைக்கொண்ட இந்தத் தொகுதியில், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 11,618 வாக்குகளைப் பெற்று 5,106 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் சுமார் 15,000 வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையான வாக்கு வங்கிகள் தங்களுக்கு ’கை’ கொடுக்கும் என்று நினைக்கிறது, காங்கிரஸ் தரப்பு.

அதேபோல, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் இங்கு தனித்துப் போட்டியிட்டு 6,512 வாக்குகள் பெற்ற அ.தி.மு.க-வும், 3,642 வாக்குகள் பெற்ற என்.ஆர்.காங்கிரஸும், 764 வாக்குகள் பெற்ற பி.ஜே.பி-யும் தற்போது ஒரே அணியில் இருப்பது தங்களுக்கு சாதகமானதாக நினைக்கிறது, என்.ஆர்.காங்கிரஸ்.

என்.ஆர்.காங்கிரஸின் கோட்டையாக இருந்த தட்டாஞ்சாவடி தொகுதி, கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் – தி.மு.க வசம் சென்றுவிட்டதால், இந்தத் தேர்தலில் தங்கள் பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அந்தக் கட்சி. அதனால் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி அ.தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சித் தலைவர்களுடன் வீடு வீடாக ஏறி இறங்கி வாக்கு கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

பொதுவாக, பிரசார வாகனத்திலேயே வந்து சென்றுவிடும் ரங்கசாமியின் இந்த அதிரடி, காங்கிரஸ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

“ஜான்குமார் ஓர் அரசியல் வியாபாரி. பணம் கொடுத்து நெல்லித்தோப்பு தொகுதி மக்களை நாராயணசாமிக்கு விற்றுவிட்டார். இந்தமுறை நீங்கள் அவரை வெற்றிபெற வைத்தாலும் அதே நாராயணசாமிக்கு உங்கள் தொகுதியை விற்றுவிட்டு, அடுத்த தேர்தலில் மீண்டும் நெல்லித்தோப்புக்கே சென்றுவிடுவார். தவிர, காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு படு மோசமாக உள்ளது” என்கிறார் ரங்கசாமி.

“அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் கொலைகள் அதிகமாக அரங்கேறின. ரங்கசாமியின் வீட்டின் அருகிலேயே கொலை நடந்தது. தற்போது ரவுடிகளுடன்தான் வாக்கு கேட்டுக்கொண்டிருக்கிறார்” என்று பதிலடி கொடுக்கிறார் முதல்வர் நாராயணசாமி.

உள்புற சாலைகள், மழை நீர் தேங்கி நிற்பது போன்றவற்றைத் தாண்டி காமராஜர் நகர் தொகுதி மக்களின் தற்போதைய தலையாய பிரச்னை, குடிநீர். இப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக வருவதால், அன்றாடம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களின் வாசலில் வரிசையில் நிற்கின்றனர், மக்கள். அதைச் சரிசெய்வோம் என்ற வாக்குறுதியுடன் வைட்டமின் ‘ப’வை அதிகமாகக் கொடுக்கும் வேட்பாளருக்குத்தான் ஓட்டு என்று காத்திருக்கிறார்கள், காமராஜர் நகர் தொகுதி மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here