திமுகவில் இளைஞரனி செயலாளராகிறார் உதயநிதிஸ்டாலின்

0
764

திமுகவின் முக்கியப் பதவியான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு மிக விரைவில் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 1980-களில் அனைத்துக் கட்சிகளும் இளைஞர் இயக்கத்தைக் கட்டமைக்க ஆரம்பித்தபோது திமுகவும் இளைஞர் அணியை உருவாக்கியது. அதன் முதல் செயலாளர் ஆனார் ஸ்டாலின். பின்னர் 1989-ம் ஆண்டு அவருக்கு எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு கிடைத்தது. 1996-ம் ஆண்டு மேயராகப் பொறுப்பேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
திமுகவில் வாரிசு அரசியல் என கண்டனம் எழுந்தது. ஆனால், அது பின்னர் மற்ற கட்சிகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டதால் வாரிசு என்கிற கோஷம் எடுபடவில்லை. இந்நிலையில் ஸ்டாலினைத் தொடர்ந்து கனிமொழி, அழகிரி, தயாநிதி மாறன் என வாரிசுகள் வந்தனர்.
சமீபத்தில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார் ஸ்டாலின், அதற்கு முன்னரே அவர் வகித்த இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் இளைஞரணியை வலுவாக வழி நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும், தலைமைக்குப் பலரும் ஒத்துழைப்பு இல்லை என்கிற குற்றச்சாட்டும் ஒருசேர வைக்கப்பட்டது.
மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு எழுந்தது. அவர் சினிமாவில் நடித்து வந்தார். இது தவிர முரசொலி நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். சினிமா மூலம் பிரபலமான அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும் என்பது பலரது நீண்ட கால கோரிக்கை. அதை ஸ்டாலின் தள்ளிப்போட்டு வந்தார்.
ஆனால் வீட்டுக்குள்ளும், கட்சிக்குள்ளும் கோரிக்கை வலுத்து வந்தது. ஆரம்பத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தனது நண்பர் அன்பில் பொய்யாமொழி மகேஷுக்காக மட்டும் பிரச்சாரம் செய்தார் உதயநிதி. அதுதான் அவரது முதல் அரசியல் என்ட்ரி.
அதன் பின்னர் தனது எல்லை எதுவென வகுத்து நாசுக்காக பல விஷயங்களைத் தவிர்த்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில் கட்சித் தலைமை ஏற்ற தந்தைக்கு உதவியாக பிரச்சாரத்தில் குதித்தார் உதயநிதி ஸ்டாலின்.
பல இடங்களில் அவரது பேச்சு பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்தது. கேள்வி பதில் பாணியில் அவரது பேச்சு வரவேற்பைப் பெற்றது. தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பெருவெற்றி பெற உதயநிதியும் காரணமாக இருந்தார் என்று திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் கொண்டாடினர்.
இது அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைக்கு மேலும் வலு சேர்த்தது. திமுகவில் உதயநிதி ஸ்டாலினைப் பொறுப்பில் கொண்டு வரவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மக்களவை தேர்தல் முடிந்த கையோடு, மாவட்டம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட வாரியாக திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.
கமல், ரஜினி, சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் திமுகவும் புதிய வடிவம் எடுக்கவும் இளம் தலைமுறையினர் மத்தியில் கட்சியை வலுவாகக் கொண்டு செல்லவும் முடிவெடுத்தாகவேண்டும் என்ற கருத்தும் வைக்கப்பட்டது.
மேற்கண்ட கருத்துகளை திமுக தலைவராக, புறந்தள்ளாத ஸ்டாலின் விரைவில் திமுக இளைஞரணியின் மாநிலத் தலைமைக்கு உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வாய்ப்பு என்று கூறப்பட்டது. கடந்த மாதம் தனது தாத்தாவின் பிறந்த நாள் அன்று அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் தவிர்த்துவிட்டார்.
இந்நிலையில் இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் வெள்ளக்கோயில் சாமிநாதன் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்திற்கு அனுப்ப, அதை மேலிடமும் ஏற்றுக்கொண்டது. இதனால் இளைஞரணி பொதுச்செயலாளர் பொருப்பு காலியாக உள்ள நிலையில் ஒன்று உதயநிதி ஸ்டாலினை அறிவிக்கவேண்டும் அல்லது வேறு ஒரு பொருத்தமான நபரை அறிவிக்கவேண்டிய நிலைக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார்.
சொந்த பந்தங்கள் நெருக்கடி, இளைஞர் அணியினர் விருப்பம் போன்றவற்றால் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி பொதுச்செயலாளராக அறிவிக்க ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here