விழுப்புரம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி!

0
1087

முதல் முறையாக தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் துறையில் வேதாந்தா நிறுவனம் கால் பதிக்கிறது.

விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 116 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது.

விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் கடந்தாண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இந்நிலையில், முதற்கட்டமாக எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்வதற்கான 32 ஆய்வு எல்லைகளை வேதாந்தா நிறுவனத்துக்கு வரையறுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 41 தரமுறைகளின் படி இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கிணறுகள் அமைய உள்ள இடத்தில் நீர் மற்றும் காற்றின் தரத்தை மதிப்பிடுதல், திட்டத்தின் மதிப்பீடு மற்றும் பயன்கள், உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை கையாளும் திறன், கழிவு எண்ணெயை கையாளும் திறன் உள்ளிட்ட 41 விதிமுறைகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

முதல் முறையாக தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் துறையில் கால் பதிக்கும் வேதாந்தா நிறுவனம், விழுப்புரத்தில் 139 சதுர கிலோ மீட்டர், புதுச்சேரியில் 2 சதுர கிலோ மீட்டர், ஆழமற்ற கடல் பகுதியில் 1,654 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 1,794 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் இந்த 116 எரிவாயு கிணறுகளை அமைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here