சுயநலத்தோடு நடத்தும் பந்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் – பாஜக தலைவர் சாமிநாதன்

0
432

பாஜகவின் புதுச்சேரி மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதுச்சேரி காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி மாநில அந்தஸ்து கேட்டு அனைத்து கட்சிகள் என்ற போர்வையில், ஆளும் கூட்டணி கட்சியினர் மறறும் காங்கிரஸ் ஆதரவு அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். கடந்த 50 ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், மத்திய அமைச்சராகவும், எப்போதும் பிரதமருடனேயே செல்லும் நிழல் பிரதமராகவும் இருந்திருந்தும் புதுச்சேரி மாநிலத்திற்கு துரோகம் இழைத்துவிட்டு புதுச்சேரி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தவர், இன்று பாஜக மீது பொய்புகார்களை கூறிவருகிறார்.

இன்று போராட்டம் நடத்தும் இவர்கள் ஏன் மாநில அந்தஸ்து கோரி கடந்த 50 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது யார் தடுத்தது, மாநில அந்துஸ்து கோரி இன்று போராட்டத்தில் இணைந்து இருக்கும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதே போராட்டத்தை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏன் நடத்தவில்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க இயலாத நாராயணசாமி போராட்டம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து மக்களை திசை திருப்புகிறார். நாராயணசாமியும், சிதம்பரமும் மத்திய அமைச்சர்களாக இருந்த போது புதுச்சேரிக்கு தனி கணக்கு துவங்கி புதுச்சேரிக்கு வரவேண்டிய நிதி குறைய காரணமாக இருந்தவர்கள். இன்று போலியான போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

புதுச்சேரியில் பல முதல்வர்கள் சட்டமன்றத்தில் மாநில அந்தஸ்து குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். அதை எல்லாம் தடுத்தது காங்கிரஸ் கட்சி தான். அத்தகைய காங்கிரஸ் கட்சிக்-கு பாஜகவை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு எந்த தகுதியும் இல்லை.  புதுச்சேரி வளர்ச்சிக்காக போராட்டம் நடத்துகிறேன் என்று சொல்லும் நாராயணசாமிதான் புதுச்சேரியின் வளர்ச்சிக்கு அதிகம் முட்டுக்கட்டைகளை போட்டவர். அவரது செயல்பாடுகளின் மீது திருப்தி இல்லாததால்தான் இப்போதுள்ள  அவரது சட்டமன்ற உறுப்பினர்களே அவருக்கு எதிராக உள்ளனர். டெல்லியில் நடைபெறும் இந்த போராட்டம் வெறும் கண் துடைப்பு நாடகம். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜனவரி 8ந் தேதி பந்த் போராட்டம் தேவை அற்றது. இந்த போராட்டத்தின் மூலம் ஆளுங்கட்சி மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளது. பண்டிகை நேரத்தில் புதுச்சேரி மக்களுக்கு எதிரான பந்த் இது. கடந்த 50 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உணவுப் பொருட்களின் விலை அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது.  எனவே, இந்த பந்த் சுயநலத்தோடு நடத்தும் பந்த்.  இதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here