64 சதவித வரி விதிப்பால் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்து…

0
623

புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்று பல்வேறு இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள்ஆண்டுதோறும் நடத்தப்படும். நட்சத்திர விடுதிகள், சிறிய ஓட்டல்கள், கடற்கரையோர ரிசார்ட்டுகள், பொது சுற்றுலா இடங்கள், மது பார்கள் ஆகியவற்றில் சிறப்பு அனுமதி பெற்று கேளிக்கை நிகழ்ச்சிகள், மது, உணவு விருந்துகள், நடனம், இசை, மேஜிக்ஷோ போன்றவை நடத்தப்படும். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று புத்தாண்டை வரவேற்க அண்டை மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கேற்ற இடத்தை தேர்வு செய்து அங்கு சென்று புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கேளிக்கை வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கேளிக்கை வரியாக 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு 40 சதவீத தொகையை நகராட்சிக்கு கேளிக்கை வரியாகசெலுத்த வேண்டும். இது தவி ஜி.எஸ்.டி.யாக 24 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் ஒரு டிக்கெட்டுக்கு 64 சதவீத தொகையை வரிக்கே செலுத்த வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.

இது தவிர நிகழ்ச்சி நடத்துபவர்கள் அரசுத் துறைக்கு சொந்தமான இடங்களுக்கு வாடகையும், ஓட்டலில் நடைபெற்றால் அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு வாடகையும் செலுத்த வேண்டும். மேலும் டிஜே, நடனமாடுபவர்கள், தொகுப்பாளர்கள்ஆகியவற்றுக்கும் பெரியதொகை செலுத்தவேண்டியிருக்கும். இதைத் தவிர மது, உணவு விருந்துக்கும் ஆகியவற்றுக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால் தரமான நிகழ்ச்சியையோ, தரமான உணவையோ வழங்கினால் நஷ்டத்தையே சந்திக்க நேரிடும். மலிவான நிகழ்ச்சிகளை நடத்தினால் ஓட்டல் நிர்வாகத்திற்கும், சுற்றுலா பயணிகளிடமும் அவப்பெயர் ஏற்படுத்தும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பெரும்பாலான நட்சத்திர விடுதிகள் முதல் ஓட்டல் விடுதிகள் வரை புத்தாண்டு கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை கைவிட்டு விட்டனர்.

இதற்கு பதிலாக தங்கள் ஓட்டலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மட்டும் மெல்லிசை நிகழ்ச்சிகள், சிறி யவிளையாட்டு போட்டிகள் நடத்த முடிவு செய்து விட்டனர். துறைமுக வளாகம், காலாப்பட்டு அசோகா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடுபடகு குழாம் ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் டிக்கெட் விற்பனை மந்தகதியிலேயே உள்ளது. அதிகப்படியான வரிவிதிப்பால் புதுச்சேரியை விட்டுவிட்டு புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் நிகழ்ச்சி நடத்த பலர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆரோவில், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் தனியார் இடங்கள், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கமாக புதுச்சேரியில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவே வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர். புதுச்சேரியில் கொண்டாட்டங்கள் இல்லை என்பதை தெரிந்துகொண்டு வேறு நகரங்களுக்கு தங்கள் பயணத்தை மாற்றி புதுச்சேரியிலிருந்து கிளம்பிச் செல்ல தொடங்கியுள்ளனர். இதே நிலை நீடித்தால் வரும் காலத்தில் புத்தாண்டிற்காக புதுச்சேரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும் என்பது உறுதி.

இதனால் புத்தாண்டை மட்டுமே மையமாக வைத்து நடைபெறும் வியாபாரமும் வெகுவாக பாதிக்கப்படும். எனவே அரசு இதை கருத்தில் கொண்டு புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டல் நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here