விவசாயிகள் பிரச்சனைகளில் தீர்வுக்காண மத்திய அரசு தீவிரம், வட்டியில்லாக் கடனுக்கு திட்டம்

0
565

விவசாயக் கடன் தள்ளுபடி, விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்தது. இதில் சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை இழந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியுடன் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் அதற்கான நடவடிக்கையை எடுத்தது.
இம்மாநிலங்களில் கிராமப்புற விவசாயிகளை கண்டுகொள்ளாதது, அவர்களின் தேவையை சரிவர நிறைவேற்றாதது பா.ஜனதா தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதேபோன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்திய அரசு மீது பல்வேறு காரணங்களால் அதிருப்தியில் இருக்கின்றனர். 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்ததையடுத்து, 2019 பாராளுமன்றத் தேர்தலில் விவசாயிகளின் வாக்குகளைப் பெறும் நோக்கில் நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. பிரச்சனையை தீர்க்க மூன்று திட்டங்களை யோசித்து வருகிறது. வங்கி கடனுக்கு முறையாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்தல், உணவு தானிய பயிர்களை காப்பீடு செய்திருந்தால் அதற்குரிய ப்ரிமியம் தொகையை தள்ளுபடி செய்தல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ப்ரிமியம் தொகையை பாதியாக குறைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடனாக ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. கடனை சரியாக செலுத்திவரும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இப்போது மீதமுள்ள 4 சதவீதத்தையும் தள்ளுபடியாக அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது, உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடக்கிறது என அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வழக்கமாகமான வட்டி தள்ளுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்கிறது. இப்போது கூடுதல் வட்டித்தள்ளுபடியை ஏற்பதால் சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

பிரதான் மந்திரி பைசல் பிமா யோஜனா திட்டம் மூலம் பயிர்களை காப்பீடு செய்திருந்தால் அதற்குரிய ப்ரிமியம் தொகையை தள்ளுபடி செய்தல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ப்ரிமியம் தொகையை பாதியாக குறைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here