பதவியும் அதிகாரமும் சிலருக்கு ஆக்சிஜன் போன்றது – மோடி கடும் தாக்கு

0
585

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி அவரது நினைவாக 100 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு நாணயத்தை வெளியிட்டுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘இன்றைய அரசியல் அரங்கில் 2 அல்லது 5 ஆண்டுகள் பதவியில் இல்லாமல் போனாலும் சிலர் நிம்மதியை இழந்து விடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.
இவர்களுக்கு அதிகாரமும், பதவியும் ஆக்சிஜன் போன்றது. அவை இல்லாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துதான் பணியாற்றி வந்தார்.

தன்னைவிட தான்சார்ந்திருந்த கட்சியைவிட இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் முன்வைத்தே அவரது அரசியல் பயணம் அமைந்திருந்தது. அனைத்தையும் விட ஜனநாயகம் மிகவும் உயர்ந்தது என அவர் கருதினார்.

ஜனசங்கம் இயக்கத்தை கட்டமைத்தார். நமது ஜனநாயகத்தை காப்பதற்காக அவர் ஜனதா கட்சியில் இணைந்தார். ஒவ்வொரு கல்லாக கட்டி வாஜ்பாய் எழுப்பிய மாளிகையான பா.ஜ.க. இன்று உலகில் மிகப்பெரிய அரசியல் கட்சிகளின் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது.
சித்தாந்தத்தில் சமரசம் செய்வதா? ஆட்சியில் நீடிப்பதா? என்ற கேள்வி எழுந்தபோது பா.ஜ.க.வை அவர் உருவாக்கினார். தாமரைக்கான விதையை நட்டு அதற்கான பலனையும் அவரது காலத்தில் அறுவடையும் செய்து விட்டார்.

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், உடல்நலக்குறைவு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் பல ஆண்டுகளாக ஊடகங்களில் பேசப்படும் பொருளாக இல்லாமல் வாஜ்பாய் வாழ்ந்து வந்தார்.

அவர் மறைந்தபோது மக்கள் அவருக்கு செலுத்திய இரங்கல்களையும் மரியாதையையும் வைத்து மக்களின் மனங்களில் எவ்வளவு பெரிய முத்திரையை வாஜ்பாய் பதித்திருந்தார் என்பதை நம்மால் கண்கூடாக காண முடிந்தது.

அவர் பேசியபோது இந்த நாடு பேசியது. அவரது குரல் இந்த நாட்டின் குரலாக இருந்தது. வாஜ்பாயின் குரல் பா.ஜ.க.வின் குரலாக மட்டுமில்லாமல் சாதாரண மனிதர்களின் உண்ர்வுகளை பிரதிபலிக்கும் குரலாக அமைந்திருந்தது என்றும் மோடி புகழாரம் சூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here