புதுச்சேரியில் விரைவில் வருகிறது பப்…….

0
718

சுற்றுலாப் பயணிகளைக் கவர புதுச்சேரியில் விரைவில் வருகிறது பப். உரிமம் பெற்று சிறு மது உற்பத்திக் கூடம் அமைத்து அங்கேயே பீர் தயாரித்து தரலாம் என்பது தொடர்பான விதிகளை கலால்துறை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் கலால்துறை மூலம் அதிகளவு வருவாய் கிடைத்து வருகிறது. 2017-18ல் ரூ. 725 கோடியை எட்டிய இத்துறையானது, 2018-19 நிதியாண்டில் ரூ. 800 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் விரைவில் பப் வருகிறது. உரிமம் பெற்று சிறு மது உற்பத்திக் கூடம் அமைத்து அங்கேயே பீர் தயாரித்து தரலாம் என்பது தொடர்பான விதிகளை கலால்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கலால்துறை வட்டாரங்கள் கூறுகையில், “வழக்கமாக நிறுவனங்களில் பீர் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு வருவது வழக்கம். அதற்குப் பதிலாக பீர் தயாரிக்கும் சிறு மது உற்பத்திக் கூடம் அமைக்க உரிமம் பெறலாம். இதுதொடர்பான வரைவு விதிகளை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்படி அரசிதழில் வெளியிட்டுள்ளோம்.

சிறு மது உற்பத்திக் கூடத்தில் நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே பீர் தயாரிக்க முடியும். தயாரிக்கப்படும் பீரினை வல்லுநர்கள் தர ஆய்வு செய்த பிறகே வாடிக்கையாளர்களுக்குத் தர முடியும். எவ்வகை பிராண்டை தயாரிக்கிக விண்ணப்பிக்கிறார்களோ அதற்கு மட்டுமே அனுமதியுண்டு. உரிமத்தில் சர்வதேச பிராண்ட் ஆறு வகைகள் தயாரிக்க இயலும். ஆண்டுதோறும் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். முக்கியமாக இங்கு தயாரிக்கப்படும் பீரை பாட்டிலில் அடைத்து விற்கக் கூடாது. கிளாஸ் மற்றும் ஜக்கில்தான் தர வேண்டும்என்று குறிப்பிடுகின்றனர்.

சுற்றுலாத்துறையினர் கூறுகையில், ”புதுச்சேரிக்கு தற்போது பெங்களூரு மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து இம்முறை நடைமுறைக்கு வரவுள்ளது. தற்போது பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் பீரை அங்கேயே தயாரித்து வாடிக்கையாளருக்கு தரும் பப் தற்போது புதுச்சேரியிலும் வர உள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, ”நிதி பிரச்சினை புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அதற்காக தற்போது முதல் கட்டமாக பப் தொடங்கும் முடிவு அரசிதழில் வெளியாகியுள்ளது. அதையடுத்து கோவாவில் உள்ளது போல் கடலில் கப்பலை வைத்து சூதாட்ட கிளப் அமைக்கும் திட்டத்தையும் அரசு நடைமுறைப்படுத்த உள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதுஎன்று தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here