இங்கிலாந்தில் என் பெயரில் சொத்துக்கள் இல்லை- விஜய் மல்லையா

0
783

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அவர் நடத்தி வந்த கிங்பி‌ஷர் விமான நிறுவனம் ரூ.800 கோடி பாக்கி வைத்து இருந்தது. அதற்காக அவரது ஏ319 ஜெட் சொகுசு விமானம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்தது.

இந்த நிலையில் வங்கி கடனுக்காக இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்கும்படி அந்நாட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு லண்டன் அருகே ஹார்போர்ட் ஷையரில் விஜய் மல்லையா தங்கியிருக்கும் லேடி வால்க் அன்ட் பிரம்பிள் லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் லண்டனில் தங்கியிருக்கும் விஜய் மல்லையா ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது “இங்கிலாந்தில் உள்ள எனது சொத்து விவரங்களை கோர்ட்டில் பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருக்கிறேன்.

எனவே அவற்றை முடக்கி கடனுக்காக வங்கிகள் பறிமுதல் செய்து கொள்ளலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் சொத்துக்கள் எதுவும் என் பெயரில் இல்லை. ஆடம்பர மாளிகை எனது குழந்தைகள் பெயரிலும், லண்டனில் உள்ள வீடு எனது தாயார் பெயரிலும் உள்ளது.

எனவே சொத்துக்கள் எதையும் பறிமுதல் செய்ய இயலாது. சில கார்கள், சில நகைகள் உள்ளது. வேண்டுமானால் அவற்றை பறிமுதல் செய்யட்டும். அதில் எந்த தடையும் இல்லை.

நானே அவற்றை ஒப்படைக்கிறேன். அதற்கான நாள், நேரம் மற்றும் இடத்தை தெரிவிக்கட்டும் என பதட்டமின்றி மிரட்டும் பாணியில் பதில் அளித்தார்.

சொத்துக்கள் பறிமுதல் குறித்து டுவிட்டரில் ஏற்கனவே பதில் அளித்து இருந்தார். அதில் இந்திய குற்றவியல் அமலாக்கத்துறை இந்தியாவில் உள்ள எனது சொத்துக்களை முடக்கி இருக்கலாம். ஆனால் அவற்றை விற்க முடியாது. சிறிதளவு வட்டியை மட்டும் வசூலித்து கொள்ளலாம்” என தெரிவித்து இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here