சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காவிடில் கவர்னர் மீது அவமதிப்பு வழக்கு- முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை

0
1602

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலத்திற்கு நீட் தேர்வு எழுதச்செல்லும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்து இருந்தோம். அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்ற 113 பேருக்கும், காரைக்காலில் இருந்து சென்ற 18 பேருக்கும், மாகியில் இருந்து சென்ற 104 பேருக்கும், ஏனாமில் இருந்துசென்ற 69 பேருக்கும்ரூ.5,16,860 நிதி கல்வித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ரூ.1500&ம், கூடுதலாக போக்குவரத்து செலவிற்கு ஏற்ப வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிநாராயணன் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதியரசர் தெரிவித்தார். அப்போது எதிர்தரப்பை சேர்ந்த மத்திய அரசின் வழக்கறிஞர், அந்த மனுவுக்கு பதில் கொடுப்பதற்காக 3 வார காலம் அவகாசம் கேட்டுள்ளார். இது சம்மந்தமாக நீதிமன்றம் முடிவு செய்யும்.

எங்களை பொறுத்தவரைஅரவிந்த்  கெஜிரிவால் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  கொடுத்த தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு முழுமையாக பொருந்தும். இந்திய அரசியல் அமைப்பு சாசன பிரிவு எடுக்கின்ற முடிவுகள் அல்லது கொடுக்கும் தீர்ப்பானது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். டெல்லியை விட புதுவைக்கு அதிக அதிகாரம் உள்ளது. இது சம்மந்தமாக சட்ட வல்லுநர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். முதல்வர், அமைச்சர்களால் எடுக்கப்பட்ட முடிவை மாற்றுவதற்கான அதிகாரம் கவர்னருக்கு இல்லை. விளக்கம் கேட்க அதிகாரம் உண்டு. கோப்பை திருப்பி அனுப்புவதற்கோ, நிராகரிப்பதற்கோ அதிகாரம் கிடையாது. அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுனருக்கு தெரிவிக்கலாமே தவிர ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை. துணைநிலை ஆளுநர்கள் மாநிலஅரசின் செயல்பாடுகள் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. தடுத்து நிறுத்துகின்ற அளவில் செயல்படக்கூடாது.

துணை நிலை ஆளுனரின் கருத்தை அதிகாரிகள்மீதும், அமைச்சர்களின் மீதும் திணிக்க கூடாது. எனவேதான், தனிப்பட்ட முறையில் துணைநிலை ஆளுநருக்கு எந்த ஒரு அதிகாரம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கவர்னரின் செயல்பாடுகள் எப்படி உள்ளது? என்று நான் தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன்.  நான் சட்டவல்லுநர்களையும் கலந்தாலோசித்து வருகிறேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கவர்னர் மதிக்காத பட்சத்தில் அவமதிப்பு வழக்கு தொடரநீதிமன்றம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இலவச துணி தொடர்பான கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி அடுத்த ஆண்டு எப்போது, எத்தனை பேருக்கு வழங்குவீர்கள் எனக்கேட்டு கோப்பை திருப்பி அனுப்பினார். வேண்டுமென்றே திட்டமிட்டு காலம் தாழ்த்துவதற்காக சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு திருப்பி அனுப்புகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., டெல்லிசிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here