சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கக் கோரி உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம்

0
319

சமூக வலைதள கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கோரி பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக வலைதள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக் கோரி சென்னை, மும்பை மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதன்மூலம் சமூக ஊடகங்களில் போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மற்றும் இணையதளம் மூலம் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களைக் கண்டறிவது சுலபமாக இருக்கும் என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி, பேஸ்புக் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கி அது தொடர்பான அறிக்கையை 3 வாரத்துக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், விதிமுறைகளை உருவாக்கி வருவதாகவும், இறுதி செய்ய மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஜனவரி இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை ஜனவரி மாதம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். – பிடிஐ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here